சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

“பறக்கும் வேளை”

மிதக்கின்ற விமானத்தினுள்
பிறக்கின்ற கவிதையொன்று
கருக்கொண்ட மேகங்களாய்
கரைகின்ற சொற்துளிகள்

தவழ்கின்ற மேகங்களை
தழுவுகின்ற நினைவுகள்
தமிழாக இசைக்கின்ற
தனியான இராகமிது

எந்தையும் தாயுமிங்கு
என்னோடு பறப்பாரொ ?
எண்ணத்தின் மூலமாய்
ஏதேதோ சொல்வாரொ ?

காற்றோடு காற்றாக
காததூரப் பயணமிது
நேற்றோடு கலந்திட்ட
நினைவுகளோ சுமையாக

விழிமூடும் வேளையிலும்
விழிதிறக்கும் பொழுதிலும்
உள்ளமெல்லாம் தமிழ்தானே !
உயிர்த்துடிப்பும் அதுதானே !

இங்கிலாந்து நினைவுகளை
இந்தியாவில் தரையிறக்கும்
இணைக்கின்ற பாலமாக
இருப்பதெல்லாம் தமிழ்தானே !

கவிஞனாக எண்ணவில்லை
கவிதையென்று கொள்ளவில்லை
மனிதனிவன் நீலவானில்
மிதக்கின்ற புலம்பலிது

விஞ்ஞான விந்தையதில்
விளைந்ததிந்த விமானத்தில்
அஞ்ஞான மனிதனிவன்
மெய்ஞானம் காண்பதெப்போ ?

விடிகின்ற பொழுதிலெல்லாம்
வடிக்கின்ற கவிதைகளாய்
முடிக்கின்ற வாழ்க்கையதில்
முடியாத கேள்விகளாய் . . . . .

சக்தி சக்திதாசன்