பாட்டி சொன்ன கதை
கேட்டு வளர்ந்த மனம்
விட்டுச் சென்ற நினைவு
மீட்டுகின்ற கானம் இது
பாட்டி என்றொரு உருவம்
பார்த்தது அன்றைய பொழுது
போர்த்த சுகந்த உணர்வுகள்
பொங்கும் இந்த வேளையில்
எந்தையும் தாயும் கொண்ட
முந்தைய உறவின் எச்சங்கள்
சிந்தையில் விதைத்த பந்தத்தில்
சிறப்புடை உறவாய் பாட்டியே !
அப்பாவின் அன்னை பாட்டியாய்
அன்றென் வாழ்வினில் கண்டதும்
அவளுடை அன்பின் எல்லைகள்
அளவிளா வகையினில் விரிந்ததே !
அவ்வை என்பதுமொரு பாட்டியே
அன்னைத் தமிழின் தொன்மையில்
ஆண்டாள் என்பதுமெம் பாட்டியே
ஆண்டாள் தமிழை அக்கோதையே !
ஆடையாய் அன்னை தந்தையும்
அணிகலனாய் பாட்டி அழகூட்டுவாள்
அறிவுரை ஆயிரமாய் உரைத்திடுவாள்
அன்புடன் பட்டியெமக்கு கதைகளாய்
பாட்டியின் வைத்தியம் இன்றுமே
பாரினில் வியப்புடன் செயலிலே
பாக்குடன் வெற்றிலை சேர்த்தே
பவித்திரமாய் பாட்டி மென்றிடுவாள்
பாண்டி என்றொரு விளையாட்டு
பாட்டிக்கே வெற்றி என்றுமதில்
பாதுகாப்பாய் அவளின் நினைவுகள்
பெட்டகம்போல் நெஞ்சில் நிறைந்திருக்கே !
சக்தி சக்திதாசன்