சிந்திக்கவே
நேரமில்லாமல்
சந்திக்கவே
காலம் கிடைக்காமல்
முந்திக் கொண்டே
வேகமாய் விந்தையாக
உலகம் உருளுது தோழா !
நான் , நான்
என்றே தினமும்
தனக்குள் இறுமாப்பாய்
வீண், வீணாய்
உழன்ற காலங்கள்
கண் முன்னே
கதையாய்த் தெரியுது தோழா !
விளக்கைத் தேடும்
விட்டிலைப் போல
இலக்கைத் தொலைத்து
விழுந்த நேரம்
தொலைக்க வைத்த
கணங்களின் கனமும்
முழுக்க நெஞ்சில்
சுமந்திடும் நிலையது தோழா !
பகட்டாய்த் தெரியும்
வாழ்வைச் சுவையென
பிழையாய் எண்ணியே
விரயம் செய்த
வேளைகள் தெளிவாய்
இன்று தெரியும் பொழுதுகள்
வலித்திடும் நெஞ்சத்தை
வருடும் இதமிது தோழா !
எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லை என்பது
துல்லியமாய்த் துலங்கும்
பொன்னான காலம்
கழிந்திட்ட பொழுதுகள்
திரும்பவும் கிடைத்தால்
பொழிந்திடும் அனுபவம்
திகழ்ந்திடும் பருவமிது தோழா !
அறிந்ததைச் சொன்னேன்
நான் ஞானியுமல்ல
அனைத்தையும் துறந்த
முனிவனும் அல்ல
அழுதிட்ட பொழுதுகள்
உழுதிட்ட அனுபவம்
விழுதான உனக்கு
மொழிந்திடும் தாகமிது தோழா !
சக்தி சக்திதாசன்