சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும்சந்திப்பு!
கவி அழகு!
சிந்தனையின் சிதறல்களைச்
சித்திரமாய்ச் செதுக்கலிட்டு
முந்திவந்து சொல்லிடும்
முத்தாம் படையலிது!
வந்தனையாய் அணைத்திட்டால்
வற்றாத அருவியென
வாசலெங்கும் கோலமிட்டு
வாசனை தூவிநிற்கும்!

சந்தங்கள் விளையாடும்
சரிதங்கள் உயிர்ப்பாகும்!
நிந்தனைச் செயல்களினை
நீறாக்கி நடைபோடும்!
சுந்தரச் சுவடுகளில்
சொக்கட்டான் ஆடியுமே
எதுகையும் மோனையும்
எழிலாகப் பவனிவரும்!

காதலும் நோதலும்
கருவாகி உயிர்பெடுக்கும்
கட்டற்ற இயற்கையைக்
கண்முன்னே படமாக்கும்!
பட்டுத் துகிலாகப்
பரவசச் சிறகாக
முட்டிமோதி என்னை
முப்போதும் தாலாட்டும்!
முடிவிலியாம் கவி அழகு!

கீத்தா பரமானந்தன்27-01-24