சந்தம் சிந்தும்
சிறுமை கண்டு பொங்குவாய்!
கண்ணில் காணுங் கயமையைக்
கருவில் ஒழித்தல் கடமையாம்
மண்ணில் மனிதம் நிலைக்கவே
மதியில் வேண்டும் உறுதியும்!
எண்ணம் போல வாழ்வினால்
எங்கும் பதர்கள் ஆட்சியாய்
புண்ணில் வேலைப் பாச்சுறார்
புவனம் சகதி ஆக்கிறார்!
மிடிமை கொண்ட பிறவியாம்
மேதினியின் மனிதனே!
அடிமை பட்ட பிறவியாய்
ஆயுள் நீட்டல் வெறுமையாம்!
பொறுமை விட்டு நீயுமே
புத்தி தன்னைத் தீட்டியே
சிறுமை கண்டு பொங்குவாய்
சிலம்பம் ஆடி நசுக்குவாய்!
பாவியரின் செயல்களாற்
பரிதவிப்பில் உலகமும்
பூமி என்னும் பூவனம்
பூக்க வேண்டும் இனிமையை
சாமி ஆகி நீயுமே
சாய்க்க வேண்டும். தீமையை!
காணும் காட்சி யாவிலும்
களிப்பின் மெருகு விரியவே
பாவம் போக்கும் இரட்சனாய்ப்
பாரில் நீயும் உலவுவாய்!
கீத்தா பரமானந்தன்20-01-25