சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
பனிப்பூ!
வண்ணச் சோபை இழந்து
வாடிக் கிடக்கும் தருவில்
கண்ணை மயக்கி இழுத்துக்
காட்சி யாக்கும் இன்பம்!
விண்ணும் சொரிந்த கொடையாய்
விரிந்து மலரும் பனிப்பூ!
தண்மை கொண்டே அழைத்துத்
தடக்கி வீழ்த்தி இரசிக்கும்!

தூய வெண்மைப் பூக்கள்
தேசமெங்கும் நிறைக்க
மழலை ஆகி உள்ளம்
மகிழ்ந்து சிரித்துத் துள்ளும்!
ஆசை கொண்டு அணைத்தால்
அனைத்தும் ஓடி மறையும்!
ஓசை இன்றே முடக்கும்
ஊதற் காற்றை நிறைக்கும்!

மாசே காணா மலராய்
மலர்வு கொண்ட பனிப்பு!
மண்ணைத் தொட்ட பின்னே
மனிதர் மனத்தை போலே
வெள்ளைக் குணத்தை மாற்றி
வேண்டி நிற்கும் அழுக்கை!
கதிரின் ஓளியைக் கண்டால்
கலைந்தே ஓடும் பனிப்பூ!

கீத்தா பரமானந்தன்
02-12-24