சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

பள்ளிக்காலம்!
பள்ளிக் கால பரவசமாம் நினைவுகளை
பதியம் போடும் என்னெஞ்சம்!
துள்ளித் திரிந்த துடுக்குகளும்
தூணாய் நின்ற பெருமைகளும்
வெள்ள மென்னும் வீச்சுடனே
வேகங் கொண்டே நமையிழுத்தே
உள்ளம் நிறைந்த உவப்புடனே
உணர்வை ஊஞ்சல் ஆட்டிடுமே!

உரிமை கொண்ட உறவாகி
ஒன்றி நின்ற தோழர்கள்!
விரிச லின்றே ஓரினமாய்
விரிந்து கிடந்த உலகமதாய்!
சிரிப்பே வாழ்வின் பாதையெனச்
சிந்தை நிறைந்த கனவுடனே!
திரிந்த இன்பக் கோலமதைத்
தினமும் மீட்டும் என்னிதயம்!

இறக்கை யின்றே பறந்துவந்தோம்
இன்ப வானில் சிறகடித்தே!
உறக்க முழைப்பை மறந்திருந்தே
உண்மை மனதாய் வாழ்ந்திருந்தோம்!
சிறப்பாம் பள்ளி இளம்பருவம்
சீராய்க் கிடைத்த அருங்காலம்!
மறக்க முடியா நினைவலைகள்
மகிழ்வாய் மனத்தைத் தாலாட்டும்!

கீத்தா பரமானந்தன்