சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

வசந்தம்!
புள்ளினங்கள் பாடப்
பூவினங்கள் கூட
தினமெல்லாம் களிப்பாக
திகழ்கின்ற. வண்ணம்
திசையெங்கும் பூக்களால்
நிறைகின்ற சின்னம்!
கனமெல்லாம் மறைந்திடக்
கனிந்திட்ட காலம்!
காற்றாகி. அணைக்கின்ற
வசந்தத்தின் கோலம்!

மொட்டையான தருக்களெல்லாம்
முகைவெடித்து நிற்கும்!
மோதிவரும் தென்றலதும்
மூச்சினையே முட்டும்!
வெட்டவெளி எங்கணுமே
விரித்திட்ட பாயாய்
வேளையின்றி அழைக்கிறதே
விருந்தெனவே பசுமை!

மெள்ளவுமே மாறியது
மேதினியின் கோலம்!
மெருகுடனே சிலிர்க்கிறது
வசந்தத்தில் ஞாலம்!
புள்ளினங்கள் பாடுகின்ற
பூபாளப் பாட்டு
புலர்கின்ற கணமெல்லாம்
பூரிப்பைச் சூட்டும்!

உள்ளமெலாம் இனிக்க்க்றதே
உதயமதைக் கண்டு
உற்சாகப் பொழுதாகி
உணர்வுகளை மீட்டும்
வெள்ளமென நிறைந்திருக்கும்
வீதியெல்லாம் பூக்கள்
வேளையின்றிப் பாடிடுவேன்
உற்சாகப் பாடல்!
துள்ளிடுதே இதயத்தில்
வசந்தத்தின் காதல்!

கீத்தா பரமானந்தன்
17-06-24