சந்தம் சிந்தும் சந்திப்பு!
நேரம்!
உலகினை இயக்கும் மந்திரமாம்
ஓயாது சுற்றுதே இயந்திரமாய்!
விலக்கிட முடியாப் பந்தமென
விலங்கெனத் தொடருதே நித்தமுமாய்!
கலங்கியே என்றும் நின்றதில்லைக்
காதலும் கருணையும் கொண்டதில்லை!
வரைமுறை வகுக்கும் பாடமென
வலையினைப் பின்னுது ஆயுளுக்கே!
ஞாலத்தின் மனிதப் பிறவிகட்கே
நயவுரை வரைவது நேரமதே!
சீலமாய்க் கண்டிடச் சிகரந்தொடும்
சீறிச் சினந்திட வீழ்த்திவிடும்!
மத்தியரேகைக் கோட்டினிலே
மலர்ந்து தவழ்ந்த மாயமெனக்
கட்டி இழுக்குது ககனத்தையே
கடந்திட முடியாப் பாலமிதாய்!
கீத்தாபரமானந்தன்
22-04-24