“ கார்த்திகையாள் “…கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.11.2024
காலநகர்வில் கங்குல் பொழுதில்
கார்த்திகையாளின் மலர்வு
கண்களுக்கு குளிர்வு
வானில் நிலா மின்னி ஒளிர
வான்மேகம் பூமழை தூவ
வண்ண நிலவாக ஒளிவீச
வந்து விட்டாள் கார்த்திகையாள் !
திருக்கார்த்திகைத் தீபத் திருநாளும்
சோமவாரத் திங்களும் அலங்காரமாக
சக்தியும் பக்தியும் இணைந்திட
தீபமேற்றிக் கோலம் போட்டு
அகல் விளக்குகள் ஜோதியாகி
ஆரவாரமாய் அகிலமே ஒளிவீச
ஆனந்தமாய் வந்துவிட்டாள் கார்த்திகையாளும் !
கார்த்திகையாளின் வரவு
காந்தளுக்கு மகிழ்வு
மாந்தருக்கோ மனநெகிழ்வு
காந்தள்களும் கலகலவெனப் பூத்துக் குலுங்கிட
மாந்தர்களும் மறவர்களை நினைத்துக் கலங்கிட
வந்துவிட்டாள் கார்காலக் கார்த்திகையாள்
கண்மணிகளை ஒளியேற்றித் துதித்திடவே !