வியாழன் கவிதை

கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன் –

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
மொழிகளின் மூலமாய் மௌனம் கலைத்தாய்/
விழிதிறந் தெம்மை விஞ்ஞா னத்தினை/
பயில வைத்த அழகிய பெண்ணே/
உயிரெனத் தோன்றி உலகினைக் காட்டி/
காசினி மேலே கருத்தை விதைத்தே/
ஆசின் றியவள் அருந்தமிழ்த் தாயே/
எழுத்தின் வரிஒலி இயங்கியல் காட்டி/
முழுதும் முக்கால மும்தான் அழியா/
நிலையை நித்தமும் நிறுத்தி பாரிலே/
அலையே அடித்தாலும் அடங்கா வீரம்/
வரப்பெற் றோமே வரமாய் உன்னால்/
அரம்போல் கூர்மை அறிஞர் பெறவுமே/
பூப்போல் பூத்த புதுமைத் தாயே/
தீப்போல் எழுந்து தீப்பற வையாய்/
பறந்து பறந்து பறந்தெங் கும்தான்/
சிறந்து சிறந்து சித்திரம் போலாய்/
கடலெனக் கொடுத்துக் கஞ்சம் இன்றியே/
உடமை பலதும் உடையாள் நீயே/
ஐம்பெரும் காப்பியமும் ஐந்திலக் கணமும் /
அம்மெனத் தந்தாய் அடங்கா கடலாய்/
ஆர்ப்பரிக் கின்ற அற்புதப் பனுவலின்/
வேராய்த் திகழும் வேங்கை நீயே/
தருவாய் நிமிர்ந்து தமிழால் தமிழை/
உருவாய் வளர்த்த உலகின் தெய்வமே/

-கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன் – இலங்கை.