சந்தம் சிந்தும் கவிதை

ஔவை

பருவ மாற்றம்
=============
பருவங்கள் என்பது
பலதிலும் மாறும்
உருவமும் மாறும்
உண்மையும் அழியும்
கருமேக வாழ்வு
கனகாலம் உண்டோ?
கருவின் பருவம்
கணக்கில் அடங்குமோ?

பூமியில் பருவத்தைப்
புரிந்திட வைத்துச்
சாமியாய்த் தெரியும்
சந்திரன் வாழ்வில்
தேய்கின்ற நிலையும்
தெரிந்த ஒன்றே
மாய்கின்ற உலகினை
மாற்றுதே பருவங்கள்

மாரியில் மகிழும்
மண்ணின் மனதை
வாரிச் செல்லும்
வெய்யிலின் வேகம்
ஏரியில் வாழும்
உயிர்கள் வாழ்வில்
பூரிக்கும் காலம்
பலநாள் இல்லை

உயிருக்கு மட்டுமா
உருவங்கள் மாறும்?
பயிருக்கும் மாறும்
பண்பிற்கும் மாறும்
வெயிலுக்குக் கூட
வெவ்வேறு இயல்பு
தயிராகின் பாலின்
தன்மையே வேறு

பனியோ மழையோ
பளிச்சிடும் வெயிலோ
கனியோ மலரோ
கடலோ வானோ
மனிதனோ மரமோ
மண்ணோ மழையோ
தனியாக ஒவ்வொன்றின்
தன்மையும் மாறும்.

ஒளவை.