நீ வந்து தங்கிய நெஞ்சில்…
=======================
உதிரம் நிறைந்த
இதயம் தன்னில்
அதிரும் சத்தம்
அமைதி ஆக்கி
மதியின் வழியே
மறைவாய்ப் புகுத்தி
புதிதாய் உன்னைப்
பதித்து வைத்தேன்
எதிலும் நாட்டம்
என்னில் இல்லை
பதிலாய் நீயும்
பகிர்ந்தாய் அன்பை
ரதியாய் என்னை
ரசித்த உன்னை
பதியாய்க் கண்டு
போற்றித் தொழுதேன்
நதியாய் இன்பம்
நாளும் பெருக
புதினம் என்று
பலபேர் பார்க்க
கதியாய் வாழ்வு
கலையும் காலம்
விதியின் வடிவில்
விரைவில் வரவே
சதியில் என்னைச்
சரித்து வீழ்த்த
புதிராய்ப் போன
பருவ வாழ்வில்
பதிந்த எங்கள்
பாசப் பிணைப்போ
பொதிந்து வாழுது
மனதின் உள்ளே.
ஒளவை.