நட்பு
———
உள்ளத்தை ஒழிக்காது
உண்மை உரைக்கவும்
பள்ளிக் காலத்தில்
பலதைப் பகிரவும்
கள்ளம் செய்தாலும்
காவலாய் நிற்கவும்
வெள்ளை மனதாய்
வேண்டும் நட்பு
உதிரத்தில் வேறாயினும்
உடன்வரும் சொந்தம்
பதிலேதும் கேட்காமல்
பாசத்தைக் காட்டிடும்
எதிலுமே துணையாய்
என்றென்றும் தொடரும்
நதிமூலம் ரிசிமூலம்
நட்புக்கும் இல்லை
கர்வத்தை உருவமாய்க்
கொண்ட துரியனும்
கர்ணனின் நட்பில்
கண்ணியம் காத்தான்
கண்ணனின் நட்போ
குசேலனின் தகுதியை
எண்ணத்தில் என்றும்
ஏற்றியே வைத்தது
சாதி மதங்கள்
சங்கடம் தரினும்
வீதிக்கு வீதி
வேற்றுமை இருப்பினும்
நாதி அற்றவனுக்கும்
நல்நட்புக் கிடைத்திடின்
சாதித்துக் காட்டிச்
சான்றாய் நிற்பான்.
ஔவை.