சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 278
“தேர்தல்”
மக்கள் ஆட்சி மலரவே
மனதை வென்றோர் ஆளவே
தக்க தேர்தல் தத்துவம்
தலை எடுத்த மகத்துவம்.

ஐந்து ஆண்டுகள் ஆளவே
ஆணை மக்கள் போடவே
வந்தது தேர்தல் வழிமுறை
வழி தவறியது சில முறை.

கட்சிகள் இடையே போட்டிகள்
கட்சி தாவும் காட்சிகள்
பட்சிகள் போல கிளை தாவி
பறப்பார் பதவி குறியாகி.

கூட்டம். கூட்டி காட்டவே
நோட்டாய் தலைக்கு ஆயிரம்
போத்தல் கணக்கில் சாராயம்
போடும் கணக்கை ஆதாயம்.

காட்டும் சலுகை பெற்றாலும்
களைத்து சலித்து உள்ளவர்கள்
போட்டு தருவர் புள்ளடியை
புதியவர் ஒருவர் தெரிவாக.
-எல்லாளன்-