சந்தம் சிந்தும் சந்திப்பு 252 “காதலர்”. நினைக்க ஊறும் பரவசம்
நெஞ்சில் ஓடும் ஒயில் முகம்
கனக்கும் இதயம் கண்டதும்
காந்தக் கண்கள் ஒன்றிடும்.
நித்திரை மறந்து இரவுகள்
நினைப்பில் புரளும் கனவுகள்
பத்தியம் ஆகும் உணவுகள்
பசியே தோன்றா பொழுதுகள்
எங்கே தோன்றும் முகமென
ஏங்கும் தேடும் உள்மனம்
வந்தால் நேரே வார்தைகள்
வாயுள் நாவை பிழற்றிடும்.
கருமையும் தெரியும் அழகாக
காதலில் பேதங்கள் குருடாக
உருவிலும் ஊனம் பெரிதாக
உளத்தில் தெரியா குறையா.
உயிர்கள் உருவே காமத்தில்
உலகே சந்ததி தாகத்தில்
இனும் ஏன் தாமதம் காதலே
இணைக!பிணைக வாழியவே
-எல்லாளன்-