நிழல் தேடும் தமிழன்
ஆதரவு பறவைகட்கு கூடு
அதிலுறங்கும் ஆணோடு பேடு
சீதளத்தில் காலநிலை மாற-எங்கும்
சென்றடையும் தம் உணவு தேட
கூதலுக்கு தன்னைக் காக்க பாம்பு
கொண்டுளது புற்று எனும் கூம்பு
ஆல மரமாம் தமிழன் ஊரில்-இன்று
அலைகின்றான் நிழல்தேடி பாரில்.
**
பசுஞ்சோலை வீடு வளவு காணி
படலையில் சங்கடப் படலை பேணி
தெருவாலே போவோர் களை தாகம்
தீர்ப்பதிலே கொண்டிருந்தம் மோகம்
வருவோரை உபசரிக்கும் பண்பு
வைத்திருந்தான் தமிழன்தான் கொண்டு
பரிதவிக்கும் இனக் கொடுமையினால் யாலே-இன்று
பாரெங்கும் நிழல்தேடு றானே.
**
பாலைவனம் ஆதி யாழ்ப் பாணம்-பாணன்
பரிசு பெற்ற தமிழர் நல் ஸ்தானம்
சோல் வனம் அவன் உழைப்பி னாலே-துலா
தோண்டி அள்ளும் ஆழ நீரை தானே
கோல எழில் பண்பு நிறை பூமி-எங்கும்
கொண்ட தெங்கள் பள்ளி கோயில் சாமி
ஆள வந்தான் சிங்களத்து ஆமி-மண்ணை
ஆக்கிர மிக்கின்றார் பெளத்த காவி.
**
ஆயுதத்தில் நம்பிக்கை தொடர்ந்து-இடையே
அமைதி முயற்சி களையும் கடந்து
சூழ்நிலையோ உலகமெங்கும் மாற
நாமோ
தொடர்ந்தும் அதே வழியில் போ ராட
ஓரணிக்குள் பிளவுகளும் சேர -இலக்கில்
ஒன்றி நின்ற போர் அணிகள் ஓய
போர்நெறியை சிங்களமும் மீற
புதைந்ததுவே போர் வீறும் ஆழ.
**
வாள் வெட்டு,போதை வஸ்து திருட்டு-எங்கள்
வளவுகளும் எம்மவரால் பறிப்பு
ஆள் கடத்தல் கப்பம் கை லஞ்சம்
அத்தனைக்கும் ஊரில் இல்லை பஞ்சம்
ஆளும் தமிழ் கட்சிக்குள் உள் பூசல்
ஆளுக்கால் பதவி வெறி சாடல்
போதுமடா ஈழ ஆசை சாமி -காப்போம்
புகலிடத்தில் அடையாளம் பேணி.”