சந்தம் சிந்தும் கவிதை

-எல்லாளன்-சந்திப்பு 193

அணைக்கட்டு,குளம் கேணி ஏரி
அடிப்படை தேவையாம் நீரைப் பேணி
உணவுப் பயிர் உற்பத்தி உண்டாக்கி
உதவும் உழவர்க்கும் உறுபசி தாகம் போக்கி என
மக்கள் பயனை இலக்காய் நோக்கி
மழை நீர்த் தேக்கங் களை உருவாக்கி
அரியணை ஏறி ஆண்ட அரசர்கள்
கரிசனை காட்டினர் அன்று!
இயற்கை யொடு வாழும் அறிவினை ஊட்டினர் நன்று
அழியாப் புகழம் அனுதினமும் ஈட்டினர்.
ஆனால் இன்றோ
தூர் வாராகுளங்கள் எல்லாம்
தொலைந்து மண்மேடாகி,
ஊர் தோறும் வடிகால்கள்
ஓடி மறைந்து ,வீடு மாடி மனையாகி
வெள்ளம் வடியாது முடமாகி
தண்ணீர் பஞ்சம் நிலையாகி
குடி தண்ணீர் குழாய்கள்கூட
கொட்டுவது சில சொட்டுகளே.
முடி ஆட்சி மன்னர் போல் இன்றைய
குடியாட்சி மன்னர்கள் கூட
வளம் குவித்தனர். தம் வம்சத்துக்கு மட்டும் .வாங்கி குவித்தனர் சொத்துகள் திக்கெட்டும்.பணக் கட்டுக்களால் மக்கள் வாக்குகளுக்கு அணைகட்டி ஆட்சியை நிலை ஆக்கிடவும் ஆவலாயினர்.
மூலை முடக்கெல்லாம் முகவர்கள்
மூலமாக
தேர்தல் தொறும் ஓடுது பார்
தேங்காமல் பண வெள்ளம்.