வியாழன் கவிதை

என் சித்திரமே பேசலாமா…….

இரா.விஜயகௌரி

என சித்திரமே உன்னோடு
சில கணங்கள் சிறு நொடிகள்
சிந்தை விரிந்தொரு சிறு பார்வை
உனக்கும் எனக்குமாய் பேசலாகுமோ

விடிகாலைப் பொழுதொன்றின்
அதிகாலைச் சூரியனாய் நிதம்
அடுக்களை தொட்டு அத்தனையும்
நித்தமுமாய் இழைந்திழைந்து களைத்து விட்டேன்

இயந்திரக் கரங்களொன்றும் இங்கு
இடுக்கெல்லாம் களை களைந்து நாளும்
நம் இத்தனை தேவை நிறைக்க
உழைத்துக் களைக்கவில்லை

தேவை தினம் அறிந்து ஏற்று நிறைத்து
சோராமல் சிதறாமல் பதறாமல் – தந்து
களைத்துப் போனவள் தான் – நிலை குலைந்து
பாவி என் பாதம் பதறியழ கதறுகின்றேன்

என்னையும் புரிந்து என் உடல் உள நலம் புரிந்து
வெறும் சமையலும்துவையலும்என்றன்றி
அத்தனை காரியமும் கனம் பண்ணி பகிர்ந்து
மெல்லதோளெடுங்கள் இல்லையேல்

ஊன உடலழிய அழுது புரண்டாலும்
மீள வாராதிந்த பாவ உயிர் புரிவீரோ