வியாழன் கவி 2044!!
“உதிர்கின்ற இலைகளே”…
உடுக்கை இழந்தவன்
கைபோல் ஆங்கே
இடுக்கண் களைந்திட
முயன்றிடா மாந்தரினம்
தரு தன் ஆடை உதிர்க்க
தருணமிது என்கிறதோ
பச்சை ஆடை போர்த்தி
பள பளத்த மேனியெல்லாம்
போராடித் தீர்த்த பின்னே
தரையில் வீழ்வதோ…
கருவறுக்கும் கயமையோ
காலச் சக்கரத்தின் சுழல்
அன்றி விதியோ சதியோ
இயற்கை நியதியோ
எதுவென்று இயம்பிட
பசுமை தன் வண்ணமிழக்க
பாழும் வரட்சி வந்து கழுத்தறுக்க
யாதென உணர்ந்திட முடியா…
உதிர்கின்ற இலைகளே
உரைத்திடுக ஓர் நீதி
துளிர்த்தாலும் தருவுக்கு
உடையாவீர் நாளும்
உதிர்ந்தாலும் மண்ணுக்கே
உரமான வள்ளண்மை
மூப்பின் பிடியில்
மரணமே முடிவென்று
சொல்லியே செல்கிறீரோ..!!
சிவதர்சனி இராகவன்