“ இளவேனில் மங்கை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 04.04.2024
வசந்தமெனும் இளவேனில்
சுகந்தம் தரும் காலமிது
வாடையும் மெல்ல விலகிட
வசந்தமும் கூடி வந்திட
சாரலும் மெல்ல வீசிட
வந்துவிட்டாள் இளவேனில் மங்கையும் !
ஆடையவிழ்த்த தருக்களில்
அரும்புகள் மெல்லத் துளிர்த்திட
பசுமை எங்கும் கொழிக்குமே
பச்சை ஆடை பூணுமே
இச்சை கொள்ள வைக்குமே
இயற்கையும் அழகில் ஜொலிக்குமே !
பகலவனும் பட்டொளியை வீசிட
பனியும் மெல்ல அகன்றிட
பார்க்கும் இடமெல்லாம்
கண்ணிற்கு விருந்தாகுமே
மொட்டுக்கள் மெல்ல முகையவுக்க
சிட்டுக்கள் எல்லாம் சிறகடித்து
கொஞ்சிக் குலாவி மகிழ்ந்திட
இளவேனில் மங்கையும் நாணிடுவாளே !