சந்தம் சிந்தும் கவிதை

இரா .விஜயகௌரி

பிரிவுத்துயர்

பிரிவுத்துயர் பதிவின் தடமிது
அறிவின் துயர் ஆற்றலின் தடம்
இடரின் படர்வில் இழந்து மடிய
செறிவின் அணுக்களெல்லாம் சிதறிப்போயின

ஆம் அறிவுப் பெட்டகம்
களவாடப்பட்டதோ -அந்த
ஆளுமைச் சிங்கமொன்று
பேரமைதி கொண்டதிங்கு

பெண்ணியத்தின். பெருநதி
திசைமாறிச் சென்றதெங்கே
ஒளிச்சிதறல் கொண்டவளை
உயிர் உறிஞ்சியநோயுமெங்கே

அவள் யாத்திரைக்கு செல்லுமுன்னே
அணி வகுத்த திடமுமெங்கே
விதைத்தவைகள் மனப்புதையலிட
நாளை மொழியாய்நிலை பெறுவாள்

மூத்தவளை எங்கள் நாற்றவளை
கொண்டு செல்ல காலனுக்கே தூது விட்டாள்
துயர் களைந்து செயல் கொள்வோம்
இணையரொடு அவர் நிம்மதியாய் இசைந்திருக்க