வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்…….

அனலிடை கருகிய அகங்கொள்
கருக்களை. அறிவென. மாற்றிய
பெருந்தளிர். தமிழர்கள் – எழுந்தார்
விடையது பகரா விடிவினை. வரைந்துரைத்தார்

செழுமை கொள் நூலகம்- பெரும்
சொத்தாய் பொக்கிஷப் புதையலாய்
காத்த கருமணியைப் பிடுங்கி எறிந்திட
எத்தனை விழிகள் தம் தானம் இழைத்தன

சாம்பல் கனலிடை பூத்ததோர்பீனிக்ஸ்
உலகெலாம் பரந்தனர் பன்மொழிப்பரப்பினில்
விதந்து உரைத்து விளங்கிடச் செப்பி
தமிழர் தம் வாழ்வியல் உலகம் கண்டது

ஒவ்வோர் நூலும் கருக்களாய் எழுந்தன
தாயகம் தாங்கிட புகலிடம் எழுந்தது
பொசுக்கிய தீயில் விசும்பிய விழிகள்
விளம்பிய மொழியில் வேரினைப் பதித்தன