வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

சித்திரை வந்தாளே………

சித்திரை மகளாள் இத்தரை மீதில்
நித்திலம் கொழிக்க வாழ்வெழுதி
புத்திளம் பூவாய் இதமாய் நிலவாய்
எங்கணும் மகிழ்ந்திட விரிந்தெழுந்தாள்

பட்சிகள் குலவின பாட்டினை எழுதின
தேன்துளி சுவைத்த வண்டினம் மயங்கி
பூவிடை மகரந்த துகள் சிந்த
எழில் கோலமிட்டனள் பூமகள் இங்கே

தென்றல் அசைந்தது மதுரமாய் ஒலித்திட
காணுமுயிரெலாம் கனிந்து ரசித்திட
பொங்கிய சூரியன் விரித்த கதிரினால்
ஆனந்த வெள்ளத்தில் காசினி மகிழ்ந்தது

சித்திரை மகளே சீர்நிறை உருவே
பொற்பதம் பதித்து புன்னகை சிந்திட
தமிழ் மாலை சொரிந்துனை வாழ்த்தி வணங்கி
நித்தமும் தொழுவோம் செயல்களால்
நிறைப்போம்