சந்தம் சிந்தும் கவிதை

அல்வை பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை 272
பள்ளிப் பருவம்

என் பள்ளிக் காலம்
மீண்டும் திரும்பிவராது பொற்காலம்
சிறகுகள் இன்றி சிறகடித்த காலம்
பட்டாம் பூச்சிகள் போல் பறந்த காலம்
வாழ்க்கையின் வசந்தகாலம்
என் பள்ளிக் காலம்

அருச்சுவடி படித்த ஆரம்பாடசாலை
அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயம் அருகே
கோவில் மணி ஓசையும் பள்ளி மணிஓசையும்
ஓன்றாய் ஓலித்திடும் காதோரம்
தேரோடும் வீதியிலே ஓடி விளையாடினோம்
தேரோடும் வீதி இன்று தார் வீதி ஆனது
கற்களாய்க் குத்துகின்றது கால்களில் -வெளிநாட்டுக் காசு
அர்ச்சனையை யாருக்கு செய்ய

வெள்ளத்தில் விளையாடுவதும் வீட்டில் அடி வாங்குவதும்
பரீட்சை வந்து விட்டால் காச்சல் வருவதும்
கள்ள மாங்காய் பறிப்பதும் களவாய் படம் பார்ப்பதும்
பட்டம் கட்டி பறக்க விடுவதும் பள்ளி நாட்களின்
பசுமை நினைவுகள்

பட்டம் கட்டி பறக்க விட்டவனும்
பட்டப் படிப்பில் உச்சம் தொட்டான்
புத்தகத் சுமையுடன் குடும்பப் பாரத்தையும் சுமந்தான்

படிக்கின்ற காலத்தில் படிப்பும் வரும்
காதல் துடிப்பும் வரும்
நிழல் தந்த மரங்களுக்கு மட்டுமே தெரியும்
நிஜயக்காதல் எதுவென்று
உயிர் மூச்சை கொடுத்துவிட்டு
பெருமூச்சை பெற்றுக்கொள்ளும்

முன்னேற வழிகாட்டிய முத்தான ஆசிரியர்களையும்
பிரம்பால் அடித்தால் படிப்பில் பிடிப்பு வருமென்ற
அறிவில் சிறந்த ஆசான்களையும் மறக்கமுடியுமா

காலத்தின் கோலம் இன்று
முன் பள்ளி செல்லும் பாலகர்கள்
முதுகில் சுமக்கின்றார்கள் புத்தகச் சுமையை
நாளை இவர்கள் வலிகள் சுமந்த காலத்தை
வரிகளால் எழுதப்போகின்றார்கள்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்