சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-276. தலைப்பு!
பருவம்
…………
பருவத்தில் பயிர்செய்
படித்திருப்போம் – நல்ல
பருவத்தில் மணமுடிக்க
மகிழ்ந்திருப்போம்!

காலத்தின் பருவத்தைக்
கணக்கெடுத்தார் – முன்னோர்
காலத்தால் அழியாத
சிலை வடித்தார்!

பருவத்தின் குறிப்பறிந்து
படையெடுத்தார் – வெற்றிப்
படைநடத்திப் பார்போற்றும்
புகழ்படைத்தார்!

ஆறுகளின் குறுக்கே
அணையமைத்தார் – பருவம்
அடைந்திட்ட காலத்தில்
விதைவிதைத்தார்!

பருவத்தின் சிறப்பினையே
அறியவேண்டும் – இளம்
பருவத்தில் வரலாற்றைப்
படிக்கவேண்டும்!

பருவத்தில் காய்கனிகள்
விளைக்கவேண்டும் – நாட்டில்
பல்லுயிரும் வாழ்ந்திடவே
உதவவேண்டும்!

பருவமழை வெள்ளத்தைத்
தடுக்கவேண்டும் – தண்ணீர்
பஞ்சமில்லா நிலையினையே
ஆக்கவேண்டும்!

ஈழத்தை மீட்டிடவே
துணியவேண்டும் – பருவம்
இனம்காக்க நல்வாய்ப்பாய்
மலரவேண்டும்!

– அபிராமி கவிதாசன்.
– 20.08.2024