சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-274.தலைப்பு!

விடுமுறை
………..

விடுமுறை வந்ததால்
விரித்தேன் சிறகை
நெடுநாள் ஆசையை
நிறைவு செய்திட
எங்கள் மண்ணில்
கால்பதிக் கின்ன்றேன்
பொங்கும் அன்பில்
பூத்த உறவுகள்
கூடவே அணைக்கின்றேன்
காடுகள் கழனிகள்
மாடுகள் கன்றுகள்
மேயும் புல்வெளி
கண்டு களிக்கின்றேன்
தோட்டம் தொரவுகள்
தோப்புக் கிணறுகள்
சுற்றுச் சூழலைப்
பற்றி மகிழ்கின்றேன்
காக்கை குருவிகள்
காடை மயில்களை
நோக்கி விரைகின்றேன்
நுழையும் இடங்களில்
வண்ண மலர்களின்
வாசம் நுகர்கின்றேன்
நேசக் கரங்கள்
நீட்டி அழைத்திட
நெஞ்சம் நெகிழ்கின்றேன்
பச்சைப் பசுங்கிளி
பறக்கும் அழகை
பார்த்துச் சுவைக்கின்றேன்
நெல்லு வயல்களில்
துள்ளும் மீன்களை
அள்ள நினைக்கின்றேன்
. ஓடையில் அல்லியின்
சிரிப்பின் அழகை
ஓடிப் பார்க்கின்றேன்
உள்ள மகிழ்கின்றேன்
எத்தனை அழகு!
எத்தனை அழகு !
அழகிய எங்கள்
அன்னை பூமியில்
மாவீரரே சாமி
எங்கள் தலைவர்
எங்கும் நிறைந்தார்
தங்கத் தமிழ்நிலம்
ஒருநாள் மலரும்
என்ற நினைப்பில்
விழிகள் திறந்தேன்
கனவு என்பதை
கண்டு உறைந்தேன்!
அடுத்த விடுமுறை
நாளில் பறப்பேன்
எங்கள் ஊரில்
இறங்கிய பின்னர்
தாமரைக் குளத்தில்
தண்ணீர் குடிப்பேன்
ஏரியில் நீந்தி
எகிறிக் குதிப்பேன்
பூமரம் வீசும்
தென்றலில் மிதப்பேன்
இம்முறை வறுமை
என்னை இழுத்ததால்
விடுமுறை வெயிலிலும்
வேலைக்குச் செல்கின்றேன்
உழைப்பே உயர்வென
ஓடி உழைக்கின்றேன்
வருகிற விடுமுறை
வானில் பறப்பேன்
கவிதன் என்னும்
கவிதைச் சிறகுடன்!

– அபிராமி கவிதாசன்.
30.07.2024