சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

18.06.2024
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்….269,

தலைப்பு! “வசந்தம்”

தென்றல் காற்றில்
பூவின் வாசம்
திருப்புகழ் இசைக்கும்
வசந்த தேசம்!
மன்றில் புலவர்
கவிதைகள் பேசும்
மரகதச் சோலை
மயில்கள் ஆடும்!

குன்றின் சாரலின்
காந்தள் பூக்கும்
குடையாய் மரங்கள்
நிழலைக்
கொடுக்கும்!
வண்டின் ஓங்கா
ரொலியே ஒலிக்கும்
வாழை மா பலா
கனியைக் கொடுக்கும்!

காதல் பறவை
சிறகை அவிழ்க்கும்
கனிந்த அன்பில்
நெஞ்சம் இனிக்கும்
தீதறு வசந்தம்
திரும்ப வருமா?
தேசம் மீண்டும்
நாளை எழுமா?

கடற்புலி அலையில்
கனலாய் வெடிக்கும்
கயவனின் கப்பலை
இரண்டாய் உடைக்கும்
திடமுடன் பெண்புலி
தீயாய்ப் பறக்கும்
திட்டம் வென்றதும்
புலிக்கொடி பறக்கும்!

என்னரும் முப்படைத்
தலைவர் ஆண்ட
எங்களின் தேய
வசந்தம் திரும்ப
ஈழம் மீட்கும்
காலம் மலர
எழுவோம் தமிழர்
படையாய்த் திரண்டே!

விடுதலை ஈழ
நாட்டில் வாழ்ந்தோம்
கெடுதலை உலகால்
யாவும் இழந்தோம்
படுகொலை மறந்தே
வாழ்வ தெப்படி?
பாரில் வசந்தம்
வருமா அப்படி?

ஒருநாள் தேசம்
வந்தே தீரும்
உலகம் தீர்ப்பைத்
தந்தே தீரும்
வருவது வரட்டும்
என்றே இருப்பதா?
வாவா! ஒன்றாய்
வெல்வோம் நன்றே!

அபிராமி கவிதாசன்.
18.06.2024.