பெண்மை போற்றுவோம்!
……
அடுப்பில் இடுப்பு ஒடியக் கிடந்தவள்
துவக்கை எடுத்துத் தோளில் சுமக்கவும்
அடக்கு முறையை அடிமை முறையை
தகர்க்கும் புலியாய்த் தலையை நிமிரவும்
வல்வை தலைவர் வைத்தது மறக்குமா?
சொல்லில் இன்றிச் செயலில் நாட்டினார்!
மனத்தின் அளவிலும் பெண்மை போற்றிய
மாசறு தலைவனின் வழியில் என்றுமே
பெண்மையைப் போற்றுவோம்! பெண்மையைப் போற்றுவோம்!
பெண்ணும் ஆணும் சமமே என்றே
எண்ணித் துணிந்தே எங்கும் சாற்றுவோம்
வேட்டைக் குமூகம் விளைந்த நாளில்
பெண்ணே தலைவி பெண்ணே முதல்வி
அவளின் விருப்பப் படியே துணையை
அடையும் உரிமை அவளுக் கிருந்தது!
படிப்படி யாக இயற்கையின் கூற்றில்
பெண்ணினம் அடிமை நிலையை அடைந்தது
பின்னர் மாற்றம் மலரப் பெண்ணினம்
எல்லாத் துறையிலும் தனித்து விளங்கும்
தன்மை பெற்றது
தன்னை உயர்த்தவே
வாழ்க்கைப் போரில் வரலாறு படைத்தது !
பெண்மை போற்றியே பெரிதும் மகிழ்வோம்!
அபிராமி கவிதாசன்
19.03.2024
–