சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதன்

வசந்தத்தில் ஒரு நாள்
………

தாய்நிலத்தில்
நாங்கள் வாழ்ந்த காலத்தில
வசந்தத்தில் ஒரு நாள்
சித்திரைத் திங்கள்
முழு நிலா நாளில்
எங்கள் கடலின்
மணற்பரப்பில்
தாய் தந்தை
அண்ணன்மார்கள்
தங்கையுடன்
அறிவார்ந்த கதைபேசி
அலைவீசும் கடலோடு
அளவின்றி மகிழ்ந்திருந்தோம்
அந்தநாள் என்றுவரும்?
இன்று எண்ணிப்
பார்க்கின்றேன்
தந்தையோ
இன்றில்லை
அண்ணனோ நோய் மடியில்
தங்கையோ தாய்மண்ணில்
துயிலும் இல்லத்தில்
மீளாத்துயரத்தில்
வசந்தத்தில்
ஓர் நாள் என்று வரும்?

வெள்ளி அலை துள்ளிவரும் – நெஞ்சை
அள்ளும்படி மகிழ்ச்சி
தரும்
தாய்மடியில் நான் படுத்து
நிலவொளியாய்ச்
சிரித்திருப்பேன்
அண்ணன்மார் கைபிடித்துக்
கடல் நீரில
கால் நனைப்பேன்
ஓயாத அலைவீச்சில்
ஓடி வந்து
கரையிருப்பேன்
மக்கள் அலை
ஒரு பக்கம்
குழுக்குழுவாய்
கூடியிருக்கும்-அந்தக்
காட்சி கண்டு
வியந்திருப்பேன்
வசந்தத்தில் ஒரு நாளை
எண்ணி எண்ணிப்
பார்க்கின்றேன் – இன்று
எங்கள் நிலம்
எதிரிகையில்
எப்படித்தான்
மகிழ்ந்திருப்பேன்?
புலம்பெயர்ந்த நாட்டில் வந்து
பொழுதல்லாம் உழைக்கின்றேன்
வசந்தத்தில்
ஒரு நாளை
கவிதைகளில்
நான் வடித்தேன்
காற்றலையில்
கவி படித்தேன்!

– அபிராமி கவிதன்
09.01.2024