“ அடையாளம் “ கவிதை….ரஜனி அன்ரன் (B.A) 20.06.2024
இனத்தின் அடையாளம் மொழி
மொழி பண்பாடு வரலாறு
எமை இனங்காட்டும் அடையாளங்கள்
அடையாளச் சின்னங்களை
பண்பாட்டு விழுமியங்களை
புலம் பெயர்ந்தாலும்
கண்போல காத்திடுவோம் !
அநீதியின் ஆதிக்கம் போரின் அனர்த்தம்
வாழ்விடத் தொலைப்பு வறுமைக்குள் தவிப்பு
தந்தது புலம்பெயர்வினை
அடையாளமானது அகதியெனும் முத்திரை
தஞ்சம் தந்த தேசத்திற்கு நன்றி !
அன்பு தந்த அன்னை மண்ணை விட்டு
அலைகடல் கடந்து அந்நிய தேசம் வந்தாலும்
அகதியாகி சகதியெனும் சேற்றுக்குள் மூழ்கினாலும்
அடுத்தடுத்து சவால்களை எதிர்கொண்டாலும்
அயராத கடின உழைப்பும் விடாமுயற்சியும்
அள்ளித் தந்தது நிரந்தர உரிமையை !
அடுத்த சந்ததி அடையாளத்தோடு வாழ
எம் மொழியையும் பண்பாட்டையும்
வரலாறாய்ப் புகட்டி நிற்போம் !