வியாழன் கவிதை

அடைமழை

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
அடைமழை
*************
எண்சீய் விருத்தம்
சீர்வயையறை: காய் காய் காய் புளிமா/ காய் காய் காய் புளிமா

கார்த்திகையில் ஆரம்பம் காரிருளில் உலகம்
கல்யாணம் கச்சேரி காண்பதெல்லாம் குறையும்
நீர்நிலைகள் எங்கணுமே நிரம்பிவிடும் அலைகள்
நீந்துகின்ற உள்ளங்கள் நிலையும்தான் குலையும்
பார்எங்கும் வழிந்தோடும் பார்ப்பதற்கும் அழகு
பாழாகிப் போய்விடுமே
பாட்டாளி உழைப்பே
ஏர்பிடித்து வாழ்பவர்க்கே ஏக்கமும்தான் மனத்தில்
ஏன்இறைவா என்றேதான் எந்நாளும் கலக்கம்!
அடைமழையில் ஆரவாரம்
ஆங்காங்கே இருக்கும்
ஆற்றினிலே ஓடங்கள்
அமிழ்ந்துபோகும் அவலம்
இடையர்கள் கால்நடைகள் இடையூறும் அடையும்
இரைதேடிப் பறவைகளும் இடம்விட்டுப் பறக்கும்
மடைதிறந்து வெள்ளமும்தான் மண்ணரிக்கும் அவலம்
மக்களிடை சோகமும்தான் மயங்கவைக்கும் பயமும்
படைத்தவனை வேண்டுவரே பாராய்கண் திறந்து
பரிவுடனே தமைக்காக்கப் பாடுவரே தொழுதே!

கவிதை நேரத்தொகுப்பாளினிகட்கு
வாழ்த்துகள்! திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு நன்றி! அனைத்துக் கவிப்படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!