வியாழன் கவிதை

வலியதுவோ முதுமை !

ரஜனி அன்ரன்

வலியதுவோ முதுமை ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 28.03.2024

வாழ்க்கைப் பயணமதில்
இளமைக்காலம் இதமாக
இளமைத் துடிப்போடு கடந்துவிட
அனுபவங்களின் முதிர்வில்
ஆட்டம் இழந்த நிலையில்
வெந்துபோன நெருப்பின் தணலாக
நொந்து போகுதே இதயங்கள் முதுமையில்
வலியதுவே முதுமை !

குழந்தைகளைப் பெற்றவலி சுமந்தவலி
குடும்பத்திற்காய் உழைத்த வலியென
இளமைக் காலத்தை அசைபோட
இடுப்புவலி கால்வலி கைவலியென
நோயினைச் சுமந்த வலியாக முதுமைக் காலமதில்
தனிமையும் வாட்ட தொடருமே வலிகளும் !

உடலில் உணர்வில் உறவில் மாற்றம்
உடலும் தளர உளமும் சோர
கடந்து போகுது காலமும்
முதுமையை நோக்கி
முதுமை வரமா? இல்லை
முன்னோர் இட்ட சாபமா?
இளமையின் ஆட்டத்திற்கு
முதுமை ஓர் பாடமே !