சந்தம் சிந்தும் கவிதை

வன்னியூர் முகுந்தன்

மே – பதினெட்டு முள்ளிவாய்க்கால் !.
*****–*****–*****
உலக வரலாற்றில்
இது எங்கள்
குருதி மை தொட்டு எழுதப்பட்ட தேதி!.

உலக நாட்காட்டியில்
துக்க நாளாக அடையாளமிடவேண்டிய
கறுப்புநாள் இது!

இந்த நாளை உச்சரிக்கும் போதே
உடற்கூறுகளில் குருதியோட்டம்
உறைந்து போகிறது இன்றும்……!.

இதயம் தன் இயக்கத்தை இழந்து
துடிப்பற்றுக் கிடப்பதான உணர்வு
உருப்பெற்று மறைகின்றது!.

உச்சந்தலையை இலக்குவைத்து
இடிமின்னல் விழுந்ததுபோல்
நாடி, நாளங்கள் செயலிழந்து போகிறது!.

உடற்கட்டை சடமாகிப்போவதான
இனப்புரியாதவோர் இறுக்கத்திற்குள்
அமிழ்த்தப் படுகிறது நெஞ்சம்!.

கந்தகக் குண்டுகளின்
கரும்புகை மண்டலம் இப்போதும்
கண்களை கலங்க வைக்கின்றன!.

குண்டுச் சன்னங்கள் அள்ளியெறிந்த
புழுதிமண்ணின் புகைப்படலங்கள்
உடல்களில் அப்புவதான ஓருணர்வு!

நாசித்துவாரங்களை அவை ஊடறுத்து
சுவாசத் தொகுதியை நிரப்புவதான
ஓர் நினைவு இன்றும்தான்!.

வானதிர வகைவகையாய் வந்த
இரசாயனக் குண்டுகளின்
கூவல் சந்தங்கள் இன்றும் செவிகளில்…..!

மணல் தரைகளெங்கும் வடிந்தோடி
ஊறிக்கிடந்த இரத்த வெடில்கள்
இன்றும் எம் சுவாசக் காற்றலையில்….!.

என்றுமறையும் இந்த நினைவுகள் ??