வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ சுற்றுலா “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 28.09.2023

சுற்றுலா என்றாலே மகிழ்வு
மகிழ்ச்சியின் பெருஉலா சுற்றுலா
சுற்றுகின்ற பூமிதனில் – நாமும்
சுற்றி வருகிறோம் உலாவாக
வளரும் நாடுகளுக்கு பலமாக
வளர்முக நாடுகளுக்கு உரமாக
பொருளாதாரத்தின் மூலமாக
வருவாயை அள்ளிக் கொட்டுதே சுற்றுலா !

சுற்றுலாவைப் பேண ஐ.நா.மன்றும்
அமைத்துத் தந்ததே செப்டம்பர் 27ம் நாளை
அகில உலக சுற்றுலாத் தினமாக
அயராத உழைப்பில் அயர்வு சோர்வு நீங்க
இயந்திர வாழ்விற்கு விடுப்புக் கொடுக்க
குடும்ப வாழ்வில் ஒற்றுமை ஓங்க
குழந்தைகள் மனதில் குதூகலம் மலர
குடும்பமாய் சென்று வருதலே சுற்றுலா !

வாழ்வியல் பயணங்கள் வண்ணமாகி
வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்திடுமே
பண்பாட்டு விழுமியங்களை கலை ரசனைகளை
கண்குளிரக் கண்டு மகிழ்ந்து
சுற்றுலாவை மகிழ்வாக்குவோம்
புத்துணர்வு கொடுக்கும் அருமருந்து சுற்றுலாவே !