வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ தலைசாய்த்திடுவோம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய் “
……………கவி…ரஜனிஅன்ரன்(B .A) 24.11.2022…………

உலகையே விழிக்க வைத்து
உரிமைக்காய் வித்தாகிய உன்னதர்களை
காலநதியினில் கரைந்துவிட்ட காவியரை
மனிதம் நிமிர மண்மானம் காத்தவரை
மரணத்தை வென்றிட்ட வீரமறவர்களுக்காய்
தலை சாய்த்திடுவோம் என்றும் !

தாயகக் கனவினைத் தாகமாக்கி
தார்மீகத்தையே வேதமாக்கி
தேகத்தையே கொடையாக்கி
தேசவிடியல் ஒன்றையே நாதமாக்கி
வேதனைகளைத் தூரமாக்கி
வெந்தணழில் ஈகமாகி
செந்தணலாகிய வீரமறவர்களுக்காய்
தலை சாய்த்திடுவோம் என்றும் !

தியாகத்தை அர்ப்பணித்த தீரர்களை
மகாயாகத்தையும் வென்றிட்ட மறவர்களை
புதுநானூறு படைத்திட்ட புரட்சிவீரர்களை
சாவினை அணைத்திட்ட சரித்திரர்களை
சந்ததி வாழத் தம்முயிர் ஈய்ந்தவரை
தன்னலமின்றிய தியாகிகளை
தலைசாய்த்து வணங்கி நன்றிக்கடன் தீரவே
அவர் தலைமுறைக்காய் கரம் கொடுப்போம் !