வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் “…கவி..ரஜனி அன்ரன் (B.A)25.05.2023

அறிவுச் சுரங்கம் ஆசியாவின் பொக்கிஷம்
அனலுக்குள் பொசுக்கி சாம்பல் மேடாக்கி
ஆண்டுகள் நாற்பத்தியிரண்டும் ஆனதுவே
மாறாத வடுவின் நீச்சமிது
ஆறாத் துயரத்தின் உச்சமிது
நீறாக்கிப் போட்டனரே நீசர்கள் !

நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்குள்
நாலாவிதமான நிகழ்வுகளும் அரங்கேற
கலவரங்கள் புலம்பெயர்வுகள் எனத் தொடர
கண்டங்கள் ஐந்திலும் மக்களும் வாழ
கரம் கொடுத்து பலரும் உதவ
எரிந்த சாம்பல் மேட்டிலிருந்து
எழுந்து நிமிர்ந்து நிற்குதே
எழிலோடு புதுப்பொலிவோடு
இன்றும் அதேயிடத்தில் அறிவாலயம் !

வெந்து தணிந்தது வேரின் அடையாளம்
தீயில் பொசுங்கியது நூல்கள் மட்டுமே
தீராத அறிவிற்கு அழிவில்லை என்றும்
அடையாளம் அழிந்தாலும் அழியவில்லை அறிவு
அள்ளியே கொடுத்தனர் நூல்களை மக்களும்
பெருகியது படைப்புக்களும் படைப்பாளர்களும்
பூத்துக் குலுங்கியது மீண்டும் மிடுக்கோடு அறிவாலயம் !