வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

< “ பூக்கட்டும் புன்னகை “……கவி….ரஜனி அன்ரன்(B.A) 03.02.2022

பூத்த புத்தாண்டில் புதுமைகள் பிறக்கட்டும்
நேற்று நடந்தவைகள் கனவாய் போகட்டும்
தொற்றுக்களும் தோற்றுப் போகட்டும்
மன இறுக்கங்கள் தளரட்டும்
மாற்றம் கண்டு மகிழ்வு பெருகட்டும்
வெற்றிகள் பலவும் வந்து சேரட்டும்
பூங்காற்றும் மெல்லத் தவழட்டும்
புன்னகைப் பூக்களும் பூத்துக் குலுங்கட்டும் !

மொழிகளில் உரைக்காத காவியம்
விழிகளில் ஒளிரும் ஓவியம்
வசீகரத்தின் வற்றாத ஜீவிதம்
வார்த்தைகள் இன்றிய மெளனம்
உதடுகளுக்கே உரித்தான தனித்துவம்
புன்னகை எனும் மகத்துவம் !

மழலையின் புன்னகையில் குதூகலம் மின்னும்
மங்கையின் புன்னகையில் காதல் அரும்பும்
பாட்டியின் புன்னகையில் அனுபவம் தெறிக்கும்
இதழ்களை மெல்ல விரியுங்கள்
புன்னகைப் பூக்களைச் சொரியுங்கள்
புத்துணர்வோடு வாழுங்கள்
பூக்கட்டும் எங்கும் புன்னகைப் பூக்கள் !