“ பன்னாட்டு இனவழிப்புநாள் தை27 “கவி……ரஜனி அன்ரன்(B.A) 27.01.2022
தைத்திங்கள் இருபத்தி ஏழினை
பன்னாட்டு இனவழிப்புத் தினமாக
பல்லுலகும் அறியும் வண்ணம்
பிரகடனமாக்கியதே ஐ.நா.மன்றும்
உலக வரலாற்று ஏடுகளின்
கறைபடிந்த அத்தியாயமாக
கண்ணீரின் காவியமாக
இனஅழிப்புக்கள் அரங்கேறியதே !
ஐரோப்பா தொட்டு அமெரிக்கா வரை சென்று
அவுஸ்ரேலியா கனடாவிலும் பரந்து
எங்கள் தேசமும் இதற்கு விதிவிலக்கல்லவே
இனத்தின் பேராலும் நிறத்தின் பேராலும்
உலகையும் உலுக்கியதே இனவழிப்புக்கள் !
கனடாவில் பூர்வீகக்குடிகளும்
அமெரிக்காவில் செவ்விந்தியர்களும்
அவுஸ்ரேலியாவில் பழங்குடியினரும்
மெக்சிக்கோவில் மாயன் இனத்தவரும்
ஜேர்மனியில் யூதர்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டனரே
எம் தேசத்தின் நேச உறவுகளின் இனவழிப்பும்
குருதியால் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியங்களே
சர்வதேசம் மெளனித்திருக்க சர்வநாசமும் அரங்கேறியதே !