வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ கொண்டாட்டக் கோலங்கள் “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 20.01.2022

பண்டிகைகள் விழாக்கள் கொண்டாட்டமென்றால்
வண்ண வண்ணக் கோலங்கள் வாசலை அலங்கரிக்க
கலைகளின் அம்சமாய் விரல்களின் வித்தகமாய்
கண்ணைக் கவருமே கண்கவர் கோலங்கள்
கொண்டாட்டத்தின் அடையாளமே கோலங்கள்
கோலங்களின் வண்ணங்கள் எண்ணங்களுக்குப் புத்துணர்வே !

கலாச்சாரத்தைப் பேண கற்பனை வளத்தைப் பெருக்க
கலையின் நுணுக்கங்களை வெளிப்படுத்த
விருந்தினர்களைக் கவர நினைவாற்றலை அதிகரிக்க
மங்களம் உண்டாக மகிழ்ச்சி பொங்க
உயிரினங்களுக்கும் விருந்தாக
மாக்கோலம் மலர்க்கோலம் புள்ளிக்கோலமென
மகிழ்வினைத் தருமே மங்கையரின் கோலங்கள் !

தமிழர் வாழ்வோடு இரண்டறக் கலந்து
பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு
பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக் காத்த
கொண்டாட்டங்கள் இன்று கோலங்கள் மாறி
கேளிக்கை நிகழ்வுகளாகி பந்தா காட்டி
கொண்டாட்டக் கோலங்கள் கேலிக்குரியதாகி
அலங்கோலமாக அரங்கேறுகின்றதுவே
காலத்தின் கோலமாக !