வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ பொங்கட்டும் பொங்கட்டும் “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 13.01.2022

கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றிகூற
உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்த
திங்களாம் தை திருப்புமுனையாக
திக்கெட்டும் பொங்கல் திறனாய் பொங்க
மங்கலம் பொங்க மனைமாட்சி பொங்க
உள்ளம் பொங்க உவகை பொங்க
உணர்வுகளும் பொங்கியெழ
பொங்கு தமிழாக பொங்கட்டும் பொங்கல் !

எண்ணங்கள் ஈடேற ஏற்றங்கள் அரங்கேற
புன்னகை மலர்கள் பூத்துக் குலுங்க
பூங்காற்று தவழ்ந்து வர
பொங்கட்டும் பொங்கட்டும்
புதுமைகள் பொங்கட்டும்
மலரட்டும் மலரட்டும்
மாற்றங்கள் மலரட்டும் !

பிறந்திருக்கும் தை சுகத்தை வளத்தை தந்து
பீடைகளை ஒழித்து நம்பிக்கை வழி காட்டி
தடைகள் விலகி தன்னம்பிக்கை ௐளிர
தித்திக்கும் பொங்கல் தேனாய் இனிக்கட்டும்
அகமும்முகமும் பொலியட்டும் ஆனந்தமும் பொங்கட்டும்
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் !