சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

தலைப்பூ

மங்களத்தின் அடையாளமே
மங்கையின் தலைப்பூ
பொங்கிடு மகிழ்வோ
அதனது விதைப்பு
தங்கிடு தாலிக்கும்
அதுதரும் வனப்பு
வண்ண வாசனைப் பூக்கள் தருமே
பெண்ணின் கூந்தலில் அமர்ந்திருந்து அழைப்பு
அதுகாணில் ஓடும்
அண்டிய களைப்பு

ஒற்றையாயும் கூந்தலில் தொற்றிக்
காட்டும் ஒய்யாரம்
பற்றைக் காடாயும் பரவி
நிறையும் காதோரம்

தொட்டிலாயும் ஆடும்
தொடு சரத்தால்
தொட்டுச் சூட்டிடவும் வைக்கும்
அன்பர் கரத்தால்

குமரிக்கும் எழில்கூட்டும்
வண்ணம் தூவி
வண்டிணையும் அழைக்கும்
வாசனை காவி
அமங்கலி தலைப்பூவைப்
பறிப்பர் தாவி
அதுகண்டு வதைபடும்
பார்ப்பவர் ஆவி
இதிலென்ன உண்டு நீதி
இதயத்தைத் தொலைத்து விட்டதே மானிட ஜாதி

கிழவிக்கும் கிட்டும்
வருமானம்
விற்பனை கூடி
அழவைக்கும் தலைப்பூவும் அடுத்தநாள் வாடி
அதன்பின்னே அதுவும் வீழும்
மண்ணை நாடி

மனோகரி ஜெகதீஸ்வரன்