“வழியா இல்லை வாழ”
சுட்டெரிக்கும் வெயிலுக்கு
சுகம் காட்ட இளநீர் பதநீர் நுங்கு
கொட்டிடப் பனை தென்னை
கோடியாய் கோடியிலும் இருக்கையில்
வாட்டிடுமோ நோய் வறுமை
வாய்விட்டே சொல்
வெட்டரிவாளைக் கண்டதும்
வெருண்டோடிப் பறந்து
வட்ட மடிக்கும் வயற்குருவிகள் கொட்டம்
கட்டைக் குலைத்ததோ
வாய்விட்டே சொல்
செட்டையடிக்கும் சேவல்கள்
பெட்டைக் கோழிகள்
முட்டை இறைச்சி முழுதாய் தர
காட்டினவோ முரண் சொல்
சதை பிடித்து வகை வகையாய்
தொகை காட்டித் தொங்கும் மா பலா வாழை காய்கனி வகைகள்
பதைபதைத்து பசியால்
பரிதவிக்க விட்டனவோ
விதை விழுத்தி விரியாது கெட்டனவோ சொல்
பராமரித்துக் கெட்டாயோ
பசுவை நீயும் சொல்
விசாலித்துப் பால்தராது
விட்டது அதுவுமோ சொல்
சட்டி பானை கொதிக்க விறகு
கிட்டாது விட்டதோ புகையேறவும் மறுத்ததோ
தொட்டதோ ஏக்கம் ஏரிவாயு வெடிப்பால் சொல்
கவிவளையத்துள் சிக்கா கருணை நிகழ்வுகள் எத்தனையோ உண்டு
கண்டிட வாருங்கள் திரண்டு
யாழ்கற்பக சோலைக்கு