சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 258
26/03/2024 செவ்வாய்
“மாறாதோ மோகம்।!”
——————————-
வாழ்வினில் வந்திடும் மோகம்,
வளர்த்திடில் தந்திடும் சோகம்!
ஆக்கையில் அதனது தாக்கம்,
அளவிட முடியாமற் போகும்!

உணவில் உண்டாகும் மோகம்,
உணர்த்திடும் உடல்நிறை ஏற்றம்!
பணமதில் அளவில்லா நாட்டம்!
பலப்பல செயல்செயத் தூண்டும்!

பதவியாம் பேயதன் மோகம்,
புரிந்திடும் பற்பல துரோகம்!
உதவியைத் தூற்றிடத் தூண்டும்!
உட்பகை எல்லையைத் தாண்டும்!

போதை மருந்தின் மோகம்,
புரிந்திடும் தினமது நாசம்!
வாதை தருவதில் மோசம்!
வளரும் இளமைக்குத் தோஷம்!

வெளிநாடு செல்லும் மோகம்,
வெறுங்கை உன்கை ஆகும்!
களியாட்டம் என்றொரு மோகம்,
கவனம்போயின் கையதை மீறும்!

மோகம் தந்திடும்-என்றும்
மொத்த அழிவதே என்று,
நாமும் உணர்ந்து-என்றும்,
நல்லது செய்வோம் நன்று!

மாறாதோ பேய்போலும் மோகம்!
மானிடத்தை அழித்திடும் ரோகம்!
போராடு மனிதா-நிற்காது காலம்!
பொறுப்பது தவறின், மாறிடும் கோலம்!

நன்றி
மதிமகன்