சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 255
05/03/2024 செவ்வாய்
“பகலவன்”
—————-
உச்சத்தி லெங்கோ உறைபவனே!
ஊர்மனை எங்கும் ஒளிர்பவனே!
கச்சிதமா யெமைக் காப்பவனே!
காலமெலா முனை வணங்குவனே!

முச்சை இல்லா முகிலினங்கள்,
முன்னே நின்று மறைத்தாலும்..
நிச்சயம் தினமும் உதித்திடுவாய்..
நிம்மதி எமக்குத் தந்திடுவாய்!

பச்சைப் பசேலென பயிர்வளர..
பார்த்துப் பார்த்து உதவிடுவாய்!
அச்சம் மிகுந்த குளிர்போக்கி..
அகிலம் மகிழச் செய்திடுவாய்!

உச்சி மண்டை வெடிக்குதென..
உன்னைச் சிலபேர் வைதாலும்,
அச்சு இன்றியே உனைச்சுற்றும்..
அன்னை அவளுக் குதவிடுவாய்!

பச்சைக் குழந்தை-படுத்தபடி..
பார்த்து உன்னை வியந்திடுமே!
கொச்சை தமிழில் உனைப்பாடி..
குவலயம் களிக்க வைத்திடுமே!
நன்றி
மதிமகன்