சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

“பொங்கலோ பொங்கல்!”
————————————-
புத்தம்புது நெல் எடுத்து
புதுப்பானை பொங்க லிட்டு
சித்தம்மிகச் சேர்ந் துண்டு
சேர்ந்திருக்கும் நாள் இன்று!

கோமய மெழுக் கிட்டு,
கோதுமைக் கோல மிட்டு,
மாமர இலை கோர்த்து,
மங்கல தொங்கல் இட்டு!

வாழையும் கரும்பும் கட்டி,
வண்ணமய மலரும் சூட்டி,
பாளையால் அடுப்பு மூட்டி,
பக்குவமாய் பானை வைத்து…

தீட்டி வைத்த பச்சையுடன்,
தீஞ்சுவை பாலும் சேர்த்து,
பூட்டி வைத்த முந்திரியும்,
பூவதன் தேனும் கலந்து….

சுற்றமெலாம் சுற்றி நின்று,
சுந்தரக் குரவை இசைக்க,
பற்றற்றான் பரமன் புகழ்,
பண்ணுடன் பாடிப் பரவ…

பொங்கி வரும் நேரமதில்,
பொங்கலோ பொங்க லென,
கொங்கு தமிழில் கோஷமிட,
குளிர்ந்திடுமே எம் மனது!!
நன்றி
மதிமகன்