சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 245
12/12/2023 செவ்வாய்
“காதல்”
————
கண்டாங்கி சேலை கட்டி..
கண்ணிரண்டில் அம்பு பூட்டி..
சண்டாளக் குமரி யொருத்தி..
சாய்ந்தாள் எனை நெருங்கி!

காதலின் பொருள் விளக்கி..
கற்பனையின் இருள் விலக்கி..
மோதலின் சுவை பருக்கி..
மேலுமின்பம் தனைப் பெருக்கி!

நெஞ்சிலே அன்பு பொருத்தி..
நினைவுதனில் எனை இருத்தி..
துஞ்சிட விடாமலே வருத்தி..
தூரநின்று சிரித்தாள் சிறுக்கி!

அஞ்சுகச் சொண் டழகி!
அழுதாலும் சிலை அழகி!
மஞ்ஞை போல் நடையழகி!
மாநிலத்தில் ஓர் பேரழகி!

குயில் போல் குரலழகி!
குஞ்சரத்தின் கண் ணழகி!
வெயில் போல் நிறவழகி!
வேண்டுவரம் தரும் அழகி!

தமிழவள் மீது காதலென்றேன்!
தவறுதானே மீண்டும் என்றேன்!
தமிழ்மீது தானும் காதலென்றாள்!
தவறில்லை ஏதும் அதிலென்றாள்!

நன்றி
மதிமகன்