சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 205
03/01/2023 செவ்வாய்

“தை மகளே!”
———————
தைமகளே! தலை மகளே வருக!
தரணி போற்றிடும் தாயே வருக!
மையிட்ட கண் பெண்ணே வருக!
மங்களம் நிறைவாய் தந்திட வருக!

முப்பத் தொரு நாட்களுடன்,
முகூர்த்த நாளும் கொண்டவளே!
செப்பிய படியே மணவறையில்,
சேர்ந்து கொள்ள வைப்பளே!

புற்றை வெட்டி, மண் எடுத்து,
புதிய அடுப்பு தனைப் பிடித்து,
கற்ற அழகுக் கோல மிட்டு,
கதிரவன் தன்னை வரவேற்க!

நெல்லு மணியின் உமி நீக்கி,
நெய்யும் சேர்த்து பொங்க லிட,
வெல்லம், பாலும், முந்திரியும்,
வேண்டி விரும்பிச் சேர்ந்திடவே!

துன்பமும் துயரமும் கருகிடவே,
தூய்மை துளிர்த்துத் தழைத்திடவே,
வன்மமும் வஞ்சமும் ஒழிந்திடவே,
வஞ்சியே வருக! வளம் தரவே!
நன்றி
மதிமகன்