சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 169
05/04/2022 செவ்வாய்
“பட்டினி”
————
எண்ண மனம் நோகிறது
இதயமே வலிக்கிறது!
கண்ணருவி பெருக்கெடுத்து
கன்னத்தால் வழிகிறது!
வானும் பொய்த்துப் போக!
வயலும் வரண்டு வெடிக்க!
தானமும் தளர்ந்து போக!
தானே வரும் பட்டினி கூட!
தசையற்ற எலும்புக்கூடுகளை
தராசில் வைத்து நிறுக்கும்
தாங்கொணாக் காட்சிகளை
தரிசிக்கும் நிலையில் நாம்!
மனத்தைக் கல்லாக்கியே மக்கள்
மாண்புறு மனைகளை விற்றிடவும்!
சினத்தால் சீறியெழும் சில மனிதர்
சிறு நீரகங்களையே விற்றிடவும்!
பெற்ற குழந்தையொன்றை விற்று
பின்னுள்ள குழந்தைகளின் பசிபோக்க
அற்ற நிலைக்கும் தள்ளும் பட்டினி
அழித்துவிடும் மனித மாண்பை!
பாடுபட்டு உழைக்கும் குடும்பம்
பாங்காக வாழப் படும்பாடும்
கூடுகட்டி வாழும் சீரான வாழ்வும்
குலைந்துபோம் பட்டினி வந்திட்டால்!
நன்றி
மதிமகன்