சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 168
29/03/2022 செவ்வாய்
“உன்னழகில் பித்தானேன்!”
———————————-
சாரளம் ஊடாய் ஓர் நாளில்
சாடை கொஞ்சம் நான் விட்டேன்!
பேரழகே நானும் உந்தனிலே
பேயும் பிடித்தேன், பித்தானேன்!

கரிய செந்நிறச் சேலையிலே
கண்டேன் உந்தன் பேரழகை!
அரிய வண்ணம் உன்மேனி
ஆகா என்ன வனப்பென்றேன்!

இளஞ் சிகப்புச் சேலை யிலும்
எடுப்பாய் நீயும் உலா வந்தாய்!
உளமே இழந்தேன் உன்னாலே
ஊரவர் இகழும் பொருளானேன்!

மஞ்சள் வண்ணச் சேலையிலே
மனதை மேலும் மயக்கி விட்டாய்!
கொஞ்சும் கிளிபோல் நெஞ்சத்திலே
கோலோச்ச நீயும் உடன்வந்தாய்!

வெள்ளை நிற உடுப்பினிலே
வியந்து நிற்க வைத்தாயே!
கொள்ளை அடித்து என்மனதை
கூனிக் குறுக வைத்தாயே!

ஆசையும் மீறிப் போயிடவே
அணைக்க வந்தேன் உந்தனையே!
கூசாது உந்தன் காவலர்கள்
குத்தியே விட்டனர்….ரோசாவே!
நன்றி
மதிமகன்